கிழக்கு மாகாணத்தில் உள்ள தாழ்நில பிரதேசங்கள் எங்கும் வெள்ளத்தில் முழ்கியுள்ளன

எஸ்.அஷ்ரப்கான் 


கடந்த ஒரு வார காலமாக  பெய்த பலத்த மழை காரணமாக கிழக்கு மாகாணத்தில்  உள்ள தாழ்நில பிரதேசங்கள் எங்கும் வெள்ளத்தில் முழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி,  நற்பிட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சில இடங்களில் பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சாய்ந்தமருது, பொலிவேரியன் சுனாமி குடியிருப்புக் கிராமம் மற்றும் மருதமுனை பிரான்ஸ் சிற்றி சுனாமி குடியிருப்புக் கிராமம் போன்றவை வெள்ளத்தில் மூழ்கிக்காணப்படுகிறன.

அத்துடன், நாவிதன்வெளி கிட்டங்கிப்பால வீதி மற்றும் கல்முனை- அம்பாறை நெடுஞ்சாலையிலுள்ள காரைதீவு, மாவடிப்பள்ளி சிறிய பாலம் என்பவற்றுக்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் வீதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த விவசாய நெற்காணிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் அறுவடை பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இம்முறை பாரிய நஸ்டம் ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.No comments: