கல்முனையில் வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீளம் கொண்ட முதலை; வனவிலங்கு அதிகாரிகளால் மடக்கிப்பிடிப்பு

செ.துஜியந்தன்


அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக அங்குள்ள தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளநீர் தேங்கிநிற்பதுடன் முதலை, பாம்பு போன்ற விஷஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளநீர் தேங்கியுள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர்.

இன்று (11) கல்முனை கொஸ்தப்பர் வீதியில் உள்ள பத்மினி என்பவரின்  வீட்டிற்குள் 8 அடி நீளமான முதலை ஒன்று புகுந்ததினால் குறித்த வீட்டார் அச்சமடைந்ததோடு அது தொடர்பில் கல்முனை பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். 

அவ்விடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் பின்னர் சம்மாந்துறை வனவிலங்கு பரிபாலன சபையின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருந்தனர்.

அங்கு வருகைதந்த வனபரிபாலனசபையின் அதிகாரிகள் குறித்த முதலையை பல மணிநேரப்போராட்டத்தின் பின்னர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில்  மடக்கிப்பிடிக்கப்பிடித்தனர். 

மடக்கிப்பிடிக்கப்பட்ட முதலை அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் விடப்பட்டது. சமீபகாலமாக சனநடமாட்டம் உள்ள பகுதிகளில் தேங்கிநிற்கும் நீர் நிலைகளில் முதலைகளின் நடமாட்டமும், பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக கல்முனை பிரதேசத்தில் கடும் மழை பெய்துவருகின்றது. ஏற்கனவே கல்முனைப் பிரதேசத்தின் சில பகுதிகள் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடும் மழையினால் மக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அன்றாடம் கூலித்தொழில் செய்து குடும்ப சீவியத்தை நடத்தும்பலர் கொரோனா தொற்றினாலும், வெள்ளத்தினாலும் கஸ்டங்களை அனுபவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments: