5ம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்புக்கு பொது அழைப்பு – ஜீவன் தொண்டமான்

க.கிஷாந்தன்


பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் நலன்புரி சார்ந்த விடயங்களுக்கு ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் இன்று 31.01.2021 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்வரும் 6ம் திகதி சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகள் அவர்களின் ஒற்றுமையை வெளிக்கொணரும் வகையில் பேச்சுவார்த்தைக்கு முந்திய தினமான 5ம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் அடையாள வேலை பணிபகிஷ்கரிப்பு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்கள் பொது அமைப்புகள் தொழிலாளர்கள் அணைவருக்கும் பொதுவான அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 25 ரூபாயால் உயர்த்தி 725 ரூபாயாகவும், மேலும் 50 ரூபாய் கொடுப்பனவுடன் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்ளிட்ட உற்பத்தி திறன் அடங்கிய தொகை ஊடாக ஆயிரம் ரூபாவை வழங்க சம்மதித்துள்ளனர்.

அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் இந்த தொகையினை வழங்குவதற்காக கம்பனி தரப்பில் நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டது. அதில் கூட்டு ஒப்பந்தத்தை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு தோட்டத்திலும் பறிக்கப்படும் கொழுந்தினை இரண்டு கிலோகளாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் முன்வைத்தனர்.

இதை நாமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களும் நிராகரித்தோம். இந்த நிலையில் எதிர்வரும் 6ம் திகதி சம்பள நிர்ணய சபையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

அதேநேரத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கிடையில் ஒற்றுமை இல்லை என்பது அவர்களின் எண்ணப்பாடாக உள்ளது. ஆகையால் எதிர்வரும் 5ம் திகதி தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தொழிலற்றவர்கள் என அனைத்து தரப்பினருடனும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடனும், ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பு ஒன்றை நடத்தி கம்பனிகளுக்கு ஒற்றுமையை வெளிக்கொணரவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிபகிஷ்கரிப்பு அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல. மாறாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கு காட்டப்படும் ஒற்றுமைக்காகவே. இவ்வாறான நிலையில் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அவர்களின் நிலைபாட்டினை தெரிவித்து வரும் அதேவேளை பொது அமைப்புகளும் கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

கட்சி என்ற ரீதியில் கொள்கைகள் வேறுபாடாக இருந்தாலும் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொள்ள அவர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

அந்தவகையில் இந்த பணிபகிஷ்கரிப்புக்கு முழுமையான ஆதரவு கிட்டும் என நாம் பொதுவாக அழைப்பு விடுகின்றோம்.

No comments: