2021ம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை ஆரம்பம்


இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வை நாளைய தினம் ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாராளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் முழுமையாக செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பாராளுமன்ற பணியாளர்களுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக,பாராளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதன்படி, கடை, அலுவலக ஊழியர் திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட 4 திருத்தச் சட்டமூலங்கள் நாளைய தினம், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், தண்டனை சட்டக் கோவையின் திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட 3 திருத்தச் சட்டமூலங்கள் நாளை மறுதினம் தினம், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மேலும், புலமைச் சொத்து திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் ஆகியன எதிர்வரும் 7ம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: