மண்முனை தென் எருவில்பற்றில் 1231 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுப்பு

செ.துஜியந்தன்


மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி சுகாதாரப் பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையான காலப்பகுதியில் 1231 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவற்றில்  31 பேர் கொரோனா தொற்றக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் தொடர்ச்சியாக பிரதேசத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன.

களுவாஞ்சிகுடி சுகாதாரப் பிராந்தியத்தில் பெரியகல்லாறு கிராமத்தில் கூடுதலாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். இங்கு இதுவரை 21 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்தும் பெரியகல்லாற்றின் சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள கொரோனா தொற்றாளர்களோடு தொடர்புபட்டவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

நேற்று முன்தினம் (05) செவ்வாய்க்கிழமை துறைநீலாவணை, பெரியகல்லாறு மற்றும் களுவாஞ்சிகுடி சுகாதார பிராந்திய அலுவலகத்திலும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் இருவர் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். 

களுவாஞ்சிகுடி பிராந்தியத்தை கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணாத பிரதேசமாக வைத்திருப்பதற்கு பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்குமாறும் பிரதேசத்தில் தூர இடங்களில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அப்பகுதி பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுள்ளனர்.

No comments: