மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் கடந்த காலங்களில் 
முறையாக இயங்கிவந்த போது, மலையக பெருந்தோட்ட மக்கள் பிரசவ காலங்களிலும் மற்றும் ஏனைய நோய்களுக்கும் தோட்டப் புறங்களில் உள்ள வைத்தியசாலைகளையே நாடி அவர்களுடைய சுகாதார வைத்திய சேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

தற்போது சில தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு இயங்கி வருகிறது. 

அதில் சில வைத்தியசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டாலும் முறையாக இயங்குவதில்லை எனவும், சில வைத்தியசாலைகள்
தோட்ட நிர்வாகத்தின் கீழ் சகல வசதிகளுடன் காணப்படுகின்ற போதிலும்  அந்த வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் இல்லையெனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட  மடுல்சீமை தேயிலை
தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் நோர்வூட் வெஞ்சர்
தோட்ட வைத்தியசாலையானது சுமார் 90 வருடகாலம் பழமைவாய்ந்தது.

குறித்த வைத்தியசாலையில் பல்வேறு வசதிகள் காணப்பட்டாலும்  நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லையென பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அந்த வைத்தியசாலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வைத்தியர் ஒருவர் இருந்த போதிலும் சுகயீனம் காரணமாக அவர் இறந்த விட்டார்.அதன் பிறகு இதுவரையிலும் எமது தோட்ட வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிப்பதில் தோட்ட நிர்வாகம் இழுப்பறி நிலையினை காட்டி வருகிறது.

இந்த வைத்தியசாலைக்கு வெஞ்சர்,அப்பலோரன்ஸ்,லோவலோரன்ஸ்,50ஏக்கர் ஆகிய நான்கு தோட்டப் பகுதிகளை சேர்ந்த 5000ம் பேர் வாழுந்து வருகின்ற போதிலும்,இந்த நான்கு தோட்ட மக்களும் அவசர தேவைகளுக்கு குறித்த வைத்தியசாலையினையே நாடி வருகின்றனர். 

இதேவேளை தற்பொழுது குறித்த வைத்தியசாலை எட்டு மாத காலமாக
மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. 

குறித்த வைத்தியசாலையில் ஒரு தாதியர் காணப்படுகின்ற போதிலும்,ஒரு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு இலங்கை தொழிலாளர்
காங்ரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு மக்கள் மனு ஒன்றினை வழங்கியிருந்தனர்.இதுவரையில் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .

தோட்ட சாரதி ஒருவரின் விட்டிற்கு உறவினர்கள் வருகை தரும் பட்சத்தில் அவர்களுடைய உறவினர் தோட்ட வைத்தியசாலையிலேயே இரவு நேரங்களில் தங்குவதாக தோட்ட மக்கள் மேலும் குறிப்பிட்டனர் .

வெஞ்சர் தோட்ட வைத்தியசாலைக்கு வைத்தியர்  ஒருவர் இல்லாமை தொடர்பில் வெஞ்சர் தோட்ட முகாமையாளர் இமேஸ்போகவத்தவிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த வைத்தியசாலையில் இரண்டு மாதங்களாக தான் வைத்தியர் ஒருவர் இல்லை. குறித்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்க வெகு விரைவில் நடவடிக்கை எடுகக்ப்படும் என அவர் குறிப்பிட்டார். 

வெஞ்சர் தோட்ட வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments: