களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் வியாபாரிகளுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுப்பு

செ.துஜியந்தன்


மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் இன்று(31) களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எழுமாற்றாக கொரோனா தொற்றைக் கண்டறியும் அன்டிஜன் பரிசோதனைகள் பொதுச்சந்தைக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில நாட்களில் கல்முனை பொதுச்சந்தை, மட்டக்களப்பு நகர்ப்பகுதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து கல்முனையின் சில பகுதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மவாட்ட சுகாதரப் பிரிவினரால் கொரோனா தொற்று தொடர்பாக பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதற்கமைய களுவாஞ்சிக்குடி சுகாதாரப் பணிமனையினால் கடந்த சில வாரங்களுக்குள் கல்முனை, மட்டக்களப்பு ஆகிய பொதுச்சந்தைகளுக்கு சென்று வந்த களுவாஞ்சிகுடியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் 62 பேருக்கு இன்று(31) அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என சுகாதாரப் பிரிவினர் அறிவித்தனர்.

இதுவரையான காலப்பகுதியில் களுவாஞ்சிக்குடி சுகாதாரப்பணிமனையினால் 1015 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பிரதேசத்தில்  முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகள் மேற்காள்ளப்பட்டன.

எதிர்வரும் நாட்களில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளும் பி.சி.ஆர் பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்பதுடன் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளா முன்வராத வியாபாரிகள் தொடர்ந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடமுடியாது எனவும், நாளை தினமும் (வெள்ளிக்கிழமை) இப்பகுதி வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது. 



No comments: