அடுத்த சந்ததிக்கு நல்லதொரு எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைக்கும் வரை என் சமூகப் பணிகளிலிருந்து நான் ஓய்வெடுக்க மாட்டேன் - அனுஷா சந்திரசேகரன்


பாடசாலை மாணவனாக இருந்தும் தனது 20வயதிலேயே மலையக மக்களின் விடிவுக்கான போராட்ட அரசியலில் முழுநேரமாக ஈடுபட்டு தான் பிறந்து வளர்ந்து நேசித்த தலவாக்கலை மண்ணிலேயே விதையாகவும் விழுந்த என் அன்பு தந்தை அமரர் பெ.சந்திரசேகரனின் 11வது சிரார்த்த தினம் இன்றாகும்.

இது தொடர்பில் எமது ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த அமரர் சந்திரசேகரனின் புதல்வியும், சட்டத்தரணியும், மக்கள் முன்னணியின் செயலாளருமான அனுஷா சந்திரசேகரன்,

அமரர் பெ.சந்திரசேகரன் சிறைவாசம் அனுபவித்த காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன். அவர் மண்ணுலகை  விட்டு பிரிந்த போது நான் சிறுமியாக இருந்தேன்.11 வருடங்கள் 11 நிமிடங்களாய் கடந்து விட்டாலும் கூட என் தந்தையின் பாச நினைவுகளோடு அவர் விட்டுச் சென்ற மக்கள் சேவையில் அவரது அடியொற்றி நடக்கிறேன்.

நான் சந்திக்கும் அனைத்து மக்களும் இன்று வரை என் தந்தையின் நினைவுகளோடு வாழ்ந்து வருவது எனக்கு புதிய சக்தியை தருகிறது. அவரது இழப்பை எண்ணி பலர் கண் கலங்குவது என் தந்தையின் பாசத்தை மீட்டு காட்டுகிறது. அவர் விட்டுச்சென்ற சேவை தொடர்ந்து முன்னெடுக்கத் துடிக்கும் இளைஞர்களின் ஆர்வம் எனக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கிறது.

என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியவர்களின் அனுபவங்கள் நான் பயணிக்க  வேண்டிய பாதையை வடிவமைத்து கொடுக்கிறது. மக்களின் உயர்ச்சியை முதன்மைப்படுத்திய என் தந்தையின் சேவைகள் மலையக மண்ணில் வேர் பதித்து கிளைகள் பரப்பி பரந்து விரிந்து கிடப்பதை மன நெகிழ்ச்சியுடன் அவதானிக்கிறேன்.

நல்லது நடக்கும் என அமைதி காப்பது அடிமைத்தனம்  செய்து முடிப்பேன் தீமைகள் அழிப்பேன் என்பது வீரத்தனம்.


சித்திரை புத்தாண்டில் பிறந்து ஆங்கில புத்தாண்டு தினத்தில் எம்மை விட்டு பிரிந்த நம் தலைவன் எம் அனைவருக்கும் பதிய வாழ்க்கையை தந்து விட்டே சென்றுள்ளார். அர்த்தமுள்ள கொள்கைகளை தந்து விட்டு சென்றுள்ளார்.நம்பிக்கை என்ற விதையை மலையகமெங்கும் விதைத்து விட்டுச் சென்றுள்ளார்.இதனை காப்பாற்றி வளர்த்தெடுத்து எம் அடுத்த சந்ததிக்கு நல்லதொரு எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைக்கும் வரை  என் சமூகப் பணிகளிலிருந்து நான் ஓய்வெடுக்க மாட்டேன்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.

No comments: