மூன்று வாரங்களுக்குப் பின்னர், நாளை நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் திறக்கப்படுகிறது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதிஸ்


நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் 
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் மாத்திரமே நாளை  (21.12.2020) பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார்களென மஸ்கெலிய பொது சுகாதார பரிசோதக அத்தியட்சகப் பிரிவின் மேற்பார்வை அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருந்த ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட  நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் 21 நாட்களுக்குப் பின்னர் கற்றல் நடவடிக்கைகளுக்காக நாளை (21.12.2020) மீண்டும் திறக்கப்பட உள்ளது.

குறித்தப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்பகமுவ, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரிக் காரியாலயங்கள் இணைந்து நோர்வூட் தமிழ் மாகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 170 பேருக்குப் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர். அதில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த ஆசிரியருடன் தொடர்பிலிருந்த
ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட  19 பேருக்கு, பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதர்களால் மேற்கொள்ளப்பட்டப் பி.சி.ஆர் பரிசோதனையில், இம்மாதம் 12ஆம் திகதி (12.12.2020) மாணவர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

குறித்த மாணவர்களின்  தொடர்பிலிருந்த வெஞ்சர் அப்பர் லோறன்ஸ் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

அதேவேளை தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

இந்த பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் நாளை (21.12.2020) வெளிவரும் என்று பொகவந்தலாவ பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

No comments: