கொரோனா தொற்று - நாட்டில் நேற்றைய தினம் மேலும் 5 பேர் உயிரிழப்பு


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி பனாகொடை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 8 பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரும், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவரும், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 592 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 554 பேர் மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 38 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 37,261 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 715 பேர் நேற்று குணமடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,267 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8818 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments: