பொகவந்தலாவ பகுதியில் இதுவரை 55 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்

பொகவந்தலாவ நிரூபர் எஸ். சதிஸ்


பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட

பிரதேசங்களில் மேலும் 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று மாலை
(28.12.2020) உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார வைத்திய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வந்தவர்கள், வட்டவளை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியைச்
சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல்
காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொழும்பிலிருந்து வந்ததால்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கு அதிகமானோருக்கு இம்மாதம்
23ஆம் திகதி (23.12.2020) பி.சிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பி.சி.ஆர்பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியாகிருந்த நிலையில், அதில்
8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ
பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த இன்ஜஸ்டி தோட்டம் பீரட்
பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த
நிலையில், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டிருந்தனர். தொற்றுக்குள்ளான குறித்தப் பெண்ணின் தாய்,
சகோதரி மற்றும் அவரது சகோதரருக்கும்  கொரோனா வைரஸ் உறுதி
செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள குறித்தப்
பெண்ணின் சகோதரி வர்த்தக நிலையமொன்றை நடாத்தி வருகின்ற நிலையில், வர்த்தக
நிலையத்துக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த 25.12.2020 அன்று
ஹட்டனில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்திற்கு சென்று வந்துள்ளதோடு,
போடைஸிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றிலேயே அவர்
ஹட்டன் சென்று வந்திருப்பதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர்களின்
ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள குறித்தப் பெண்ணின்
சகோதரர், கொழும்பிலிருந்து வந்தவரென பொது சுகாதாரப் பரிசோதர்கள்
தெரிவிக்கின்றனர். இவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில்
இருந்து, அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்திருப்பதாகவும், குறிப்பாக  பல
இளைஞர்களுடன் சேர்ந்து மைதானத்தில் விளையாடியிருப்பதாகவும்
தெரியவந்துள்ளது.

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் ஒட்ரி தோட்டத்தைச் சேர்ந்த
ஒருவருக்கும், மற்றும் இன்வெரி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வத்தளையிலிருந்து கெர்கஸ்வோல்ட் தோட்டத்துக்கு வருகைத்தந்திருந்த ஆண்
ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,
தற்போது அவரது மனைவி, மகளுக்கும்  கொரோனா  தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பிரதேசத்தில் நேற்று மாலை இனங்காணப்பட்ட 8 தொற்றாளர்களும்,
இன்று (29) சுகாதாரப் பாதுகாப்புடன் கொரோனா சிகிச்சை மத்திய
நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகப் பொகவந்தலாவ பொது சுகாதாரப்
பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுவரையில் மொத்தமாக பொகவந்தலாவ
சுகாதாரப் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்டப் பிரதேசங்களில் 55 கொரோனா 
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.




No comments: