கடந்த பத்து நாட்களில், வீதி விபத்துக்களினால் 47 பேர் உயிரிழப்பு


கடந்த 10 நாட்களில், நாட்டில் வீதி விபத்துக்களினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 394 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும்,அவர்களில் 127 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் , 267 பேர் சிறு காயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் 573 வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பண்டிகை காலத்தில் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தி, வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 20ம் திகதி முதல், பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், இவ்வாறான விபத்துக்கள் துரதிஷ்டவசமாக ஏற்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

வீதி ஒழுங்கைச் சட்டங்களை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவதே, இவ்வாறான விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  குறிப்பிட்டடுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஆயிரத்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை, இவ்வாறு தொடர்ந்தும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இருதினங்களில், பொதுப் போக்குவரத்து சேவைகளில், பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் வீதி ஒழுங்கை சட்டங்களை மீறும் நபர்களை, அவர்கள் அடையாளங் கண்டு கொள்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: