கல்முனையில் 11 கிராம சேவகர் பிரிவுகளில் 04ஆவது நாளாக தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

றாசிக் நபாயிஸ்


கல்முனையில் 11கிராம சேவகர் பிரிவுகளில் 04ஆவது நாளாக தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக  மக்கள் மிகவும் கஷ்ட நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள்.

அம்பாறை மாவட்டம், கல்முனை பொது சந்தைத் தொகுதியில் (28) மேற்கொள்ளப்பட்ட  அன்டிஜன் பரிசோதனையில் 27 பேருக்கு தொற்றுகண்டறியப்பட்டதுடன் கடந்த திங்கட்கிழமை (28) இரவு 8.30 முதல் இன்று (31) 04வது நாளாகவும் கல்முனை செய்லான் வீதி தொடக்கம் நகர வாடி வீட்டு வீதி வரை தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்து வருவதனால், இப்பிரதேசங்கள் எங்கும் சனநடமாட்டமின்றி பிரதான வீதிகள் வெறிச்சோடி அமைதி நிலவி காணப்படுவதுடன் எல்லை வீதிகளுக்கும் தடைகள் போடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசங்களிலுள்ள இம்மக்களுக்கு கல்முனை பிரதேச செயலகங்களினால் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் கடந்த 04நாட்களாக தொழிலுக்குச் செல்ல முடியாததனால் மிகவும் கஷ்ட நிலைக்குள்ளாகி உள்ளனர். 

இப்பிரதேசங்களில் அத்தியவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன், பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவிவருகின்றது.

இதேவேளை, இப்பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் கல்முனையின் ஏனைய பகுதிகளும் முடக்கப்படும் சாத்தியம் அதிகம் காணப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும்  பி.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதேவேளை இன்றைய தினம் (31.12.2020) கல்முனை பிரதான பஸ் நிலையம் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய் காணப்பட்டதுடன் பொது போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன. 

நகர் முழுவதும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது.  

No comments: