பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் 10 பேருக்கு கொரோனா

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரியாலயத்திற்குட்பட்ட பகுதியில்
 இன்று (ஞாயிற்றுகிழமை) பத்து கொரோனா தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி
வை.பி.எல்டி. பஸ்நாயக்க  தெரிவித்தார்.

26.12.2020 சனிக்கிழமை இரவு வெளியான பி.சி.ஆர் அறிக்கையில்  பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்சஸ்ரீ தோட்டப்பகுதியில்,
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஜந்து பேருக்கும்,குறித்த ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிந்துவந்த நோர்வூட் வெஞ்சர் கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள ஒரு பெண்,நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 08 ,10ம் வகுப்புகளில் கல்வி கற்று வந்த இரண்டு மாணவர்களுக்கும், நோர்வூட் போட்ரி தோட்டத்தில் ஒருவருக்கும் மற்றும் டிக்கோயா பட்ல்கல தோட்டப்பகுதியில் ஒருவருமாக  மொத்தம் பத்து தொற்றாளர்கள் இனங்காணபட்டுள்ளனர்.

இதுவரையிலும் பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரியின்
காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 47 கொரோனா தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும்
தெரிவித்தார்.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த குறித்த ஆறு பேருக்கும்
இம் மாதம் கடந்த 24ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை வெஞ்சர் கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் கடந்த வாரம் 40 வயதுடை நபர்
ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடைய குடும்பத்தில்
உள்ள முன்று பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இந்த
இரண்டு மாணவர்களுக்கு இன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு மாணவர்களும் இம் மாதம் 04ம் திகதி இறுதியாக நோர்வூட் தமிழ்
மகா வித்தியாலயத்திற்கு சென்று வந்துள்ளதுடன், போட்றி மற்றும் பட்ல்கல
தோட்டப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்கள் கொழும்பு பகுதியில் இருந்து
வந்தவர்கள் என பொது சுகாதார அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது. 

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களோடு தொடர்பினை
பேணிவந்தவர்கள் 20ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு
குறித்த பத்து தொற்றாளர்களையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு
செல்வதற்கான நடவடிக்கையினையும் பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: