மக்கள் என் பக்கம் விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் -அனுஷா


(பி.கேதீஸ்) 

சுயேட்சையாக களமிறங்கியுள்ள நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். என்னை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

என சட்டத்தரணியும் நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

 ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்துவது மனித உரிமை. அனுஷா சந்திரசேகரன் என்ற பெயருக்கு மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவர் ஏன் அஞ்சுகின்றார் என தெரியவில்லை.

அவர் தோல்வி பயத்தால் உலருகின்றார்.திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளமை முற்றிலும் தவறான கருத்து.

சந்திரசேகரன் என்ற பெயர் மலையக மக்கள் முன்னணிக்கு மாத்திரமல்ல முழு மலையக சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளம். தனது தந்தை மரணிக்கும்போது கட்சியில் 20000 க்கும் அதிகமான அங்கத்தவர்கள் இருந்தனர். இன்று இதில் கால்வாசியாவது உள்ளார்களா என்பது சந்தேகமே.

நுவரெலியா பிரதேசசபை இரண்டு முறை எங்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது ஓர் அங்கத்தவர்களை கூட சொந்த சின்னத்தில் தெரிவு செய்ய முடியாத நிலையே உள்ளது. பல தோட்டங்களில் ஓர் அங்கத்தவர்கூட இல்லை.

 காரியாலயங்கள் எங்கே இருக்கின்றன என்பது கூட அங்கத்தவர்களுக்கு தெரியாது. அங்கத்தவர்களின் வருகையும் குறைந்து வருகின்றது. இந்நிலை நீடித்தால் இன்னும் 5 வருடங்களில் கட்சியை முழுமையாக மூடவேண்டியதுதான்.

தோல்வி பயத்தால் அரசியல் கோமாளித் தனமான கருத்துக்களை தெரிவிப்பது சிலரை பொறுத்தது. தரந்தாழ்ந்த விமர்சனங்கள் அனைத்தும் அதைத் தெரிவிப்பவர்களையே தரம் தாழ்த்திவிடும்.

தரமான கருத்துக்களுக்கு நான் தரமான பதில் அளிப்பேன். இத்தேர்தலில் சிலருக்கு மலையக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் அப்போது தெரியும் சுயேட்சை வேட்பாளரது ஆளுமை என்றார்.

No comments: