அரச உத்தியோகத்தர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை முகநூலில் பதிவேற்றம் செய்யும் பேக்ஜடி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை


(வி.சுகிர்தகுமார் )

பிரதேச செயலக கிராம சமுர்த்தி மற்றும் கொரோனா வேலைத்திட்ட பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மீதாக சுமந்தப்படும் உண்மைக்கு புறம்பான அவதூறு குற்றச்சாட்டுக்களை முகநூலில் பதிவேற்றம் செய்யும் பேக்ஜடி உள்ளிட்ட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரி ஜானக விமலரெட்ண தலைமையிலான இராணுவத்தினருக்கும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் செயலாளர் கே.லவநாதன் தலைமையிலான கிராம சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவ உயர் அதிகாரிகளினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் இராணுவ முகாமின் மக்கள் தொடர்பு அதிகாரி மேஜர் ஜயசேன, மற்றும் மேஜர் சமீர, மேஜர் சாந்தலால் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளும் பிரதேச செயலக தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கொரோனா அச்சம் காணப்படும் இக்காலகட்டத்தில் பிரதேச செயலகங்களும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் தமது அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்களது சேவையினை கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்கின்றனர். இதனால் இக்காலகட்டத்தில் பல அசௌகரியங்களையும் உத்தியோகத்தர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் கிராம உத்தியோகத்தர்களுக்கான முக்கியத்துவத்தை பாதுகாப்பு தரப்பு வழங்குவதில்லை எனும் குற்றச்சாட்டும் இங்கு பரவலாக எழுந்துள்ளது.

இதனை அறிந்து கொண்டு அதற்கான தீர்வினை வழங்கும் வகையில் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலகட்டத்தில் கிராமங்களில் எழுந்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் கள்ளச்சாராய உற்பத்தி சட்டரீதியற்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கு பதிலளித்த 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரி ஜானக விமலரெட்ண அரச அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்துக்கும் இராணுவத்தினர் தீர்வினை பெற்றுக்கொடுக்க முனவருவதுடன் விரும்பிய வேளையில் கிராமத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை அறியத்தருமாறு தொலைபேசி இலக்கங்களை வழங்கினார்.

அத்தோடு அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கெதிரான நடவடிக்னை முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுமார் 20 வருடங்களின் பின்னர் கள்ளச்சாரய உற்பத்தி தலைதூக்குகின்றமையிலும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: