பிரதேச சபை தேர்தல்கள் தொடர்பில் இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிப்பு

மன்னார் பிரதேச சபை தேர்தலுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவை மன்னார் தெரிவத்தாட்சி அலுவலர் நிராகரித்ததை ஆட்சேபித்துக் கோரப்பட்ட எழுத்தாணை (SC/WRIT/07/2023) மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் வேட்பு மனுவை திகாமடுல்ல தெரிவத்தாட்சி அலுவலர் நிராகரித்ததை ஆட்சேபித்துக் கோரப்பட்ட எழுத்தாணை (SC/WRIT/05/2023) என்பன செவ்வாய்க்கிழமை (21) உயர் நீதிமன்றத்தில் (இலக்கம் 404) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரஸ்தாப தெரிவத்தாட்சி அலுவலர்களின் தீர்மானங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவுகள் ஜூலை மாதம் 27 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் விதத்தில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன. அவை மீண்டும் ஜூலை மாதம் 26 ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்தாணை மனுக்கள் நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட, ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகர ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மன்னார் பிரதேச சபை விவகாரத்தில் பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனை குறைபாடுகள் உள்ளனவாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டபோது அதை கவனத்தில் எடுத்த நீதிமன்றம் அதனை முழுமைப் படுத்தி, ஆட்சேபனையை ஜூலை மாதம் 26ஆம் தேதிக்கு முந்திய 6 வாரங்களில் உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பபட வேண்டும் எனவும், அதற்கான மாற்று ஆட்சேபனை வாதிகளால் வழக்குத் தினத்துக்கு முந்திய 4 வாரங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

தெஹியத்தகண்டிய பிரதேச சபை விவகாரத்தில் பிரதிவாதிகள் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனை, முழுமை பெற்றிராதது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை கருத்தில் எடுத்த உயர்நீதிமன்றம் அதனை முழுமைப்படுத்தி அடுத்த வழக்கு தினத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதற்கான மாற்று ஆட்சேபனையை வாதிகள் அடுத்த வழக்கு தினத்துக்கு 4 வாரங்களுக்கு முன்னர் உயர்வு மன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகளின் ஆட்சேபனைகள் தொடர்பான ஆவணங்களுடன் உரிய நபர்களின் சத்தியக்கடதாசிகள் இணைக்கப்பட்டிராதது பிரதான குறைபாடாக நீதியரசர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாறான அம்சங்களை முன்வைத்து மன்னார் பிரதேச சபை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ, சுமந்திரனும், தெஹியத்தகண்டிய பிரதேச சபை விவகாரம் தொடர்பில் சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீமும் நீண்ட வாதங்களை நிகழ்த்தினர்.

மன்னார் பிரதேச சபைக்கான வழக்கில் மனுதாரர்களான முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் மன்னார் பிரதேச சபை தவிசாளர், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஐ.எம்.இஸ்ஸதீன், கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர் இஸ்மத் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி நஸ்ரினா நவ்சரின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உடன் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் எம்.பி (சட்டமுதுமாணி), சட்டத்தரணி ஹுனைஸ் பாருக் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லாஹ் மற்றும் ஆதிவாசிகள் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் உட்பட தெஹியத்தகண்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நஸ்ரினா நவ்சரின் அனுசரணையுடன் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் (முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்), சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.



No comments: