எரிபொருள் பவுசர் ஆற்றில் விழுந்து விபத்து. பாலம் சேதம்.

சிலாபம் - புத்தளம் வீதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பத்துலு ஓயாவுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று (24) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் - கல்லடியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு எரிபொருளை விநியோகம் செய்துவிட்டு, கொழும்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிலாபம் - புத்தளம் வீதியில் பத்துலு ஓயாவிற்கு குறுக்கே உள்ள பாதுகாப்பு வேலியையும் உடைத்துக்கொ்ணடு இவ்வாறு பத்துலு ஓயாவுக்குள் வீழ்ந்துள்ளது.

விபத்தின் போது சாரதி மட்டுமே அதில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான லொறிக்குள் சிக்குண்டிருந்த சாரதியை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறு காயங்களுக்கு உள்ளான சாரதி சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக லொறியை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



No comments: