ரணில் விக்கிரமசிங்க விலை போய்விட்டார் - இராதாகிரஷ்ணன்

(க.கிஷாந்தன்)
ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (13.05.2022) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டில் 5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர். இம்முறை 6 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார். எனினும், எந்தவொருமுறையும் தனது பதவி காலத்தை அவர் முழுமையாக பூர்த்தி செய்தது கிடையாது.

கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவால் 20 ஆயிரம் வாக்குகளைக்கூட பெறமுடியாமல்போனது. தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்தார். அவருக்கு மக்கள் ஆணை இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்றே ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் பதவியை ஏற்கவில்லை. ஜனாதிபதி பதவி விலகினால்தான் ஆட்சி பொறுப்பேற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது.

ஆனால் ராஜபக்சக்களுடன் ரணில் இணைந்துள்ளார்.மொட்டு கட்சி ஆட்சிதான் வரபோகின்றது. ராஜபக்ச போய், ரணில் வந்துள்ளார். இதுதான் ஏற்பட்டுள்ள மாற்றம். இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடும்போது, ரணிலுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பது தெரியவரும். புதிய அரசில் இணையமாட்டோம். அமைச்சு பதவிகளை ஏற்கமாட்டோம். எதிரணியில் இருந்து செயற்படுவோம். 

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ரணில் விலைபோய்விட்டார். ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். இவருடன் இணைத்து கூத்தடிக்கமுடியாது. " - என்றார்.

Post a Comment

0 Comments