நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் - எம்.பி திலகராஜ்

(க.கிஷாந்தன்)

 நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும்.
எனவே, புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடையும் வரை நாம் ஓயமாட்டோம்." - என்று மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் சூளுரைத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நுவரெலியா மாவட்டம் முழுவதும் கையொப்பம் திரட்டும் பணி கடந்த 25 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியில் இருந்தும் பல தரப்பினரும் ஆதரவையும், தமது ஒருமைப்பாட்டையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் ஹட்டன் நகரிலும் இன்று (27.01.2022) கையொப்பம் திரட்டப்பட்டது. இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கமைப்பாளரான எம். திலகராஜ் கூறியவை வருமாறு,

சனத்தொகைக்கு ஏற்பட அல்லாது, அநீதியான முறையிலேயே நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சுமார் 3 தசாப்தங்களாக சமூகத்தில் கருத்தாடல்கள் இடம்பெற்றுவந்தன. எனினும், இது தொடர்பில் 2016

ஒக்டோபரில் என்னால் நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. அந்த பிரேரணைமீதான விவாதத்தின்போது பதிலளித்து உரையாற்றிய அப்போதைய துறைசார் அமைச்சர் வஜீர அபேவர்தன, நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆக உள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை 2018 ஆம் ஆண்டு அவர் முன்வைத்தார். அமைச்சரவை அனுமதியின் பின்னர் புதிய பிரதேச செயலகங்கள் தொடர்பில் 2019 இல் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் நுவரெலியாவில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களும், காலியில் 3 பிரதேச செயலகங்களும் நிறுவப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதன்படி காலி மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால்

நுவரெலியா மாவட்டத்துக்கான பிரதேச செயலகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக இரண்டு உப செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது நுவரெலியா மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.

எனவேதான் எமக்கு பிரதேச செயலகங்களே வேண்டும் என வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். மூன்று நாட்கள் கையொப்பங்கள் திரட்டப்பட்டன. மாவட்டம் கடந்த ஆதரவும் எமக்கு கிட்டியது. அந்தவகையில் நாளை தினம் (28) நுவரெலியா

மாவட்ட செயலாளரிடம் ,கையெழுத்து திரட்டப்பட்ட ஆவணம் கையளிக்கப்படும். ஜனாதிபதி,

பிரதமர் உட்பட அரசின் கவனம் அதன்மூலம் ஈர்க்கப்படும். புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை உருவாக்கிக்கொள்ளும்வரை நாம் ஓயப்போவதில்லை." - என்றார்.

No comments: