பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்திக்கான கலந்துரையாடல் பதுளை மாவட்டம்

( க.கிஷாந்தன்)

பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி செயல்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யூரி பிரஜாசக்தி நிலையத்தில் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் எண்ணகருவுக்கு அமைய தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் ஊடாகவும் ஏனைய திணைக்களங்களின் ஊடாகவும் முன்னெடுக்கபட உள்ள செயல்பாடுகள் தொடர்பாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

 இந்நிகழ்வில் பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் அபிவிருத்திக்கான பணிப்பாளர் திரு தியாகு பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்தின் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதிகள் அளிக்கும் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி " நாம் இவ்வாண்டு தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளையும் சுய தொழிலாளர்களுக்கான சந்தை வாய்ப்பு மற்றும் மூலோபாயங்கள், இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ வாய்ப்புகள், மற்றும் எமது சமூகத்திடையே தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க உள்ளோம். எமது பதுளை பிராந்திய அதிகாரிகளின் ஊடாக ஏறக்குறைய 2 ஆயிரத்துக்கும் அதிகமான பயனாளர்கள் கடந்த ஆண்டு பயனடைந்துள்ளனர்.

இதனை மேலும் அபிவிருத்தி செய்யவும் பல தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை எம் மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் எமது செயல்பாடுகள் அமையும். அந்த வகையில் பதுளை மாவட்டத்திற்கு தொண்டமான் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றின் கிளை கல்லூரி ஒன்றும் நாம் இவ்வாண்டு உருவாக்க உள்ளோம். அத்தோடு சிறுகைத்தொழில் வளையங்களையும் ஏனைய அரச திணைக்களங்களின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் நான் பெற்றுக்கொடுப்போம்.

பதுளை மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களின் ஊடாக பல அபிவிருத்தி செயல் திட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் எமது செயல்பாடுகளும் இவ்வாண்டு அமையும் என தெரிவித்தார். 

எனது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த பூனாகலை பிரதேச சபை தவிசாளர் திரு அசோக் குமார் அவர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிராந்திய இயக்குனர் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: