ஐ.பி.எல். கிரிக்கெட்- 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி வெற்றி


2021 ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதனால் தோனி தலைமையிலான சென்னை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. 

சென்னை அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளேஸிஸ் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சென்னை 7 ரன்கள் எடுத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மொயின் மற்றும் சுரேஷ் ரெய்னா மூன்றாவது விக்கெட்டிற்கு 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 

மொயின் அலி 36 ரன்களிலும், ராயுடு 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 

ரெய்னா 54 ரன்கள் குவித்து அவுட்டானார். தோனி டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப இன்னிங்ஸை முடிக்கும் பொறுப்பை சாம் கரண் மற்றும் ஜடேஜா எடுத்துக் கொண்டனர். இருவரும் 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முடிவில் 188 ரன்களை சென்னை அணி குவித்தது. 

தொடர்ந்து அந்த இலக்கை விரட்டிய டெல்லிக்கு பிருத்வி ஷா மற்றும் தவான் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் 138 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிருத்வி ஷா 72 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பந்த் களத்திற்கு வந்தார். தவான் 54 பந்துகளில் 85 ரன்களை குவித்து அவுட்டானார். அவரை தாக்கூர் LBW முறையில் வெளியேற்றினார். பிருத்வி ஷா மற்றும் தவான் தங்களது அபார பார்மை கேரி செய்துள்ளனர். இருவரும் அவர்கள் விளையாடிய அண்மைய கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ரன் குவிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.   

சென்னை அணியின் பந்துவீச்சை டெல்லி தொடக்க வீரர்கள் துவம்சம் செய்திருந்தனர். தீபக் சாஹர், சாம் கரண், தாக்கூர், ஜடேஜா, மொயின் அலி, பிராவோ என ஆறு பவுலர்கள் பந்து வீசியும் அணிக்கு தேவையான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 

இறுதியில் 8 பந்துகள் மீதமிருக்கையில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சென்னை அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களை முகம் வாட செய்துள்ளது.

Post a Comment

0 Comments