இன்று முதல் சாய்ந்தமருது மாளிகைகாடு பகுதியில் சுய தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதாக அறிவிப்பு.

எஸ்.அஷ்ரப்கான்


சாய்ந்தமருது மாளிகைக்காடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவானது சிவப்பு எச்சரிக்கை வலயத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இன்று (20) அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மாளிகைக்காடு கொரோனா  பரவல் கட்டுப்பாட்டு செயலணி மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் ஆகியன இணைந்து கடந்த 15ஆம் திகதி முதல் தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை "வீட்டுக்கு வீடு சுய தனிமைப்படுத்தல்"  வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்திருந்தனர். 

இதற்கு ஏதுவான காரணியாக, ஜனவரி 14 ஆம் திகதிய அறிக்கையின்படி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 39  கொரோனா தொற்றாளர்களும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 கொரோனா தொற்றாளர்களும் (இதில் 27 மாளிகைக்காடு பகுதியில்) காணப்பட்டமையும் இவ் "வீட்டுக்கு வீடு சுய தனிமைப்படுத்தல்"  வேலைத் திட்டத்தை முன்கொடுக்க காரணமாகியது.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதியின் அறிக்கையின்படி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 தொற்றாளர்களும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 34 தொற்றாளர்களுமாக குறைவடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

இதன் காரணமாகவே சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசங்கள் சிவப்பு எச்சரிக்கை வலயத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவானது தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை வலயமாக காணப்படுகின்றது.

இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய  ஒவ்வொரு பிரதேச வாசிக்கும், வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைத்த அனைத்து வர்த்தகர்களுக்கும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் கொவிட் - 19  கட்டுப்பாட்டு செயலணி சார்பாக  நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் இதேவேளை, கொரோனா அச்சுறுத்தலானது எமது பிரதேசத்தை விட்டு முழுமையாக நீங்கி விடவில்லை என்பதை பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளைப் இறுக்கமாகக் கடைப்பிடித்து சுயகட்டுப்பாட்டுடன் இன்று முதல் வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு சுகாதாரப் பகுதியினருக்கு பாதுகாப்பு படையினருக்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் கொவிட் - 19 கட்டுப்பாட்டு செயலணி மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினரும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்னனர்.


No comments: