ஹட்டன் ஹைலன்ஸ் கல்லுாரி மற்றும் பொஸ்கோ கல்லுாரியில் பலருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியில் இரண்டு ஆசிரியர்கள்,9 மாணவர்கள் மற்றும் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லுாரியில் இரண்டு மாணவர்கள் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இன்று (27) வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக இந்த 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. 

இதேவேளை, இன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியும் ஹட்டன் வலயக்கல்வி பணிமனையும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கடந்த வாரம் ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியில் கல்வி பயின்று வந்த மாணவி ஓருவர், சுகயீனம் காரணமாக டிக்கோயா  கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

குறித்த மாணவிக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் குறித்த மாணவிக்கும் மாணவியின் குடும்பத்தில் உள்ள மேலும் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவியோடு தொடர்பினை பேணிவந்த ஆசிரியர்கள் 14 பேரும்,34 மாணவர்களும் 14 நாட்கள் சுயதனிமைபடுத்தப்பட்டனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் இன்றைய தினம் பொஸ்கோ கல்லுாரியில் 09 மணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 11பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவேளை தொற்றுக்குள்ளான 13 பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொணடு வருகின்றமை குறிப்பிடதக்கது.
No comments: