பெருந்தோட்டக் கம்பனிகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

க.கிஷாந்தன்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெருந்தோட்டக் கம்பனிகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ். மோகனராஜன் வலியுறுத்தினார்.

நுவரெலியா, இராகலையில் இன்று (10.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மகேந்திரன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் மலையக பிராந்திய இனைப்பாளர் எஸ்.மோகன்ராஜ், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மலையக பிராந்திய செயற்பாட்டாளர் பீ.பத்மசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பதில் எமது தொழிற்சங்கமும் உறுதியாக நிற்கின்றது. அதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படும்.

ஆயிரம் ரூபா தொடர்பான முன்மொழிவு அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. முடியாத முன்மொழிவாக இருந்தால் அது பாதீட்டில் முன்வைக்கப்பட்டிருக்காது. உரிய தேடலின் பின்னரே அந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அதனை எதிர்க்ககூடிய நிலையில் கம்பனிகள் காணப்படுவது சிக்கலுக்குரிய விடயமாகும். அரச கொள்கைக்கு எதிராக செயற்படும் தொழில்துறைக்கு எவ்வாறு அரச காணிகளை குத்தகைக்கு வழங்கமுடியும்?

ஆயிரம் ரூபாவை கம்பனிகளுக்கு வழங்க முடியும். உரிய இலாபத்தை அவை ஈட்டுகின்றன. எனினும், சம்பள உயர்வை வழங்காமல் இருப்பதற்கும், வரிகளிலிருந்து தப்புவதற்கும் உப கம்பனிகளை நடத்தி பிரதான கம்பனிகள், உரிய தரவுகளை காட்டுவதில்லை. ஏனைய துறைகளில்போன்று பெருந்தோட்டத்துறையிலும் மாபியா செயற்படுகின்றது.

ஆகவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசு கூறியதுபோல, கம்பனிகளை அரசு பொறுப்பேற்கவேண்டும்." - என்றார்.

 

No comments: