வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை


நாட்டை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் இன்று 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக, எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதான நீர்த்தேக்கங்கள் 23 மற்றும் மத்திய ரக நீர்த்தேக்கங்கள் 7 ஆகியன வான்பாயும் காரணத்தால், வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், புத்தளம் மற்றும் சிலாபம் மாவட்டங்களில் சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இராஜாங்கனை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக, எழுவாங்குளம் பிரதேசத்தின் ஊடாக பயணிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீரேந்துப் பகுதிகளை அண்மித்து வசிக்கும் மக்கள் கடும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது நிலவும் காலநிலை காரணமாக கடற்றொழிலுக்கு செல்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: