நாட்டின் கொரோனா தொற்று நிலவரம் - நேற்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகின.

இதன்படி நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

வெலிபென்ன பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் களுத்துறை வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கடுமையான மார்பு நோய் மற்றும் கொவிட் நியூமோனியா நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு- 15 பகுதியை சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர் கொழும்பு வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர் என கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

மரணத்திற்கான காரணம் கொவிட் -19 நியூமோனியா இதய நோய் மற்றும் வலிப்பு நோய் என்பனவாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,நாட்டில் நேற்றைய தினம் மேலும் 403 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 401 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,ஏனைய 2 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 44,774 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,252 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7,309 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: