தை திருநாள் வாழ்த்து செய்தி - அனுஷா சந்திரசேகரன்


பொங்கல் பண்டிகையில் மகிழ்ந்திருக்கும் அனைவருடனும் எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன் என்று சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி, சந்திரசேகரன் மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார் .

நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களும் சுபநிகழ்ச்சிகளும் எமது பண்பாட்டோடும் தமிழ் வரலாற்றோடும் சம்பந்தப்பட்டவை.

இருநூறு வருடங்களுக்கு முன் இங்கு வந்த எம் முன்னோர்கள் வம்சாவழியாக இவ்வகையான அனைத்து விழாக்களினதும் பெருமைகளையும் அர்த்தங்களையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.

நன்றியை நன்றியோடு நினைவு கொள்வது  எமக்கே உரிய இணையற்ற பண்பாடாகும்.

இதன் வெளிப்பாடாகவே எமக்கு வாழ்வு தரும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நாம் பொங்கல் வைத்து நன்றி தெரிவிக்கிறோம்.

நாம் எத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் இவ்வாறான விழாக்களும் கொண்டாட்டங்களும் தான் எமக்கு மன மகிழ்ச்சியையும் பூரிப்பையும் கொடுக்கின்றன.

எம்மை விடவும் அதிக வேதனைகளையும் சுமைகளையும் முகம் கொடுத்து வாழ்ந்து வந்த எமது முன்னோர்கள் எவ்வாறு அவற்றையும் மீறி இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை காத்து எமக்கு தந்தார்களோ அதேபோல் எமது கலை கலாசார பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் எமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வது எமது கடமை இவ்வகையில் இத்திருநாளில் துன்பங்கள் மறந்து மகிழ்ந்திருக்க அனைவரையும் வாழ்த்துகிறேன். என தெரிவித்தார்.

No comments: