நாட்டில் கொரோனா தொற்று பற்றிய விபரம் - நேற்றைய தினம் ஐந்து உயிரிழப்பு பதிவு


நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் தர்கா நகரைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்றுவந்த குறித்த நபர் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அம்பன்போல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலே உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 5 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட குறித்த பெண் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கலேவென பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் கடந்த 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கலேவென மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் படி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் 592 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43,299 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 706 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,329 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 7,766 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: