முதலாவது கொவிட் தடுப்பூசி ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு


இந்தியாவிடம் இருந்து  முதற்கட்டமாக  6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும்  27 ஆம் திகதி குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை  வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனானஉரையாடல்  வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டுகருத்துரைக்கையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா  தடுப்பு அவசரகால பயன்பாட்டுக்கு oxfordastrazeneca தடுப்பூசியினை பயன்படுத்துவதற்கு தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை நேற்று அனுமதி வழங்கியது.

கொரோனா தடுப்பூசியினை நாட்டிற்கு  கொண்டுவருவது தொடர்பில் பல்வேறு  தரப்புடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே  நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள்  பிலியந்தலை பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட 3 பிரதேசங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments: