புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் - வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப மீண்டும் நிபந்தனை


வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நிபந்தனையுடனான மீள அழைத்துவரும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில சர்வதேச நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகளும், வெளியுறவு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து முன் அனுமதி பெறுவது அவசியமாகும்.

மேலும், நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்து, திருத்தப்பட்ட வழிகாட்டல்களை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவிலிருந்து வரும் எந்தவொரு விமானத்தையும் நேற்று நள்ளிரவு முதல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,

பிரித்தானியாவில் பரவிவரும் புதியதொரு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம்  மற்றும் விமான நிறுவனங்களின் உபதலைவர் தலைவர் ரஜீவ சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை,விமான நிலையம் மற்றும் விமான நிலைய நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அங்கிருந்து இந்த நாட்டிற்கு பயணிகள் வருகை தருவதை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

அத்துடன் இன்று ஐக்கிய இராச்சியத்திலிருந்து நாட்டிற்கு வருகை தருபவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் 14 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு பின்னர் மேலும் 14 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லண்டனில் இருந்து வருகை தரும் சரக்கு விமானங்களின் ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் தரப்பினர் தொடர்பில் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: