சிகிச்சையளிக்கும் நிலையங்களை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

கடந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் 500 முதல் 600 வரையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இதன்மூலம், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் வைத்தியசாலைகளில் ஏற்படக் கூடிய நெருக்கடி நிலையை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்ற வசதிகளை உள்ளடக்கி, புதிய சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, போதிய இடவசதி உள்ள இடங்கள் அல்லது கட்டிடங்களை அடையாளம் கண்டு, அதனை சுகாதார அமைச்சுக்கு கீழ் கொண்டுவந்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏற்றவிதத்தில் அபிவிருத்தி செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, புதிய சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்தும் சுகாதார அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: