தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கவுள்ள விடயங்கள்
உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிவர்த்தி செய்தல் மற்றும், அதற்கான சட்டதிட்டங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட விடங்களை முன்னெடுப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு தெளிவுப்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கிடையிலான முதலாவது சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக 7 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலத்தில் அதனை சராசரியாக 4 ஆயிரத்து 566 மில்லியன் ரூபா வரையில் மட்டுப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இடம்பெற வேண்டிய புதிய வாக்காளர் பதிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள புதிய வாக்காளர்கள் மற்றும் நீக்கப்படும் வாக்காளர்கள் குறித்த விபரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: