கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாளை முதல் நிவாரணம் வழங்கப்படும் - மாவட்ட அரசாங்க அதிபர்

கனகராசா சரவணன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 20 முதல் 24 ஆம் திகதி வரை பெய்துவந்த அடைமழை காரணமாக பாதிப்படைந்த 4593 குடும்பங்களைச் சேர்ந்த 14544 நபர்களுக்கு நிவாரணம் வழங்க 66 இலச்சத்து 12 ஆயிரத்து 290 ரூபா (6,612,290.00) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிவாரணம் நாளை வெள்ளிக்கிழமை  முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன்  இன்று வியாழக்கிழமை (31) தெரிவித்தார்.  

கடந்த 20 முதல் 24 ஆந்திகதிகளில் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரணப்பணிக்காக தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சினூடாக 6,612,290.00 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 1630 குடும்பங்களைச் சேர்ந்த 5868 நபர்களும், கோறளைப்பற்று வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 654 குடும்பங்களைச் சேர்ந்த 1930 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 5263 குடும்பங்களைச் சேர்ந்த 16172 நபர்களும்.

கோரளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 367 குடும்பங்களைச் சேர்ந்த 1157 நபர்களும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 470 நபர்களும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 87 நபர்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 480 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 152 நபர்களும்,

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 1726 குடும்பங்களைச் சேர்ந்த 5538 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 120 நபர்களும மண்முனை மேற்கு வவுனதீவு  பிரதேச செயலாளர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 85 நபர்களும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 நபர்களும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 நபர்களும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 1080 குடும்பங்களைச் சேர்ந்த 3230 நபர்களுமாக 11 ஆயிரத்து 138 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பாதிப்புக்குள்ளானவர்களில் 4593 குடும்பங்களைச் சேர்ந்த 14544 நபர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இவர்கள் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தத்தமது உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

No comments: