போலி நாணயத்தாள்களை அச்சிடும் பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது
போலி நாணயத்தாள்களை அச்சிடும் பிரதான சந்தேக நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நேற்று குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பொருட்கள் மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப கட்டவிசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் இன்று கொழும்பு மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: