இனப் பாகுபாடான கருத்துக்களை பதிவிடுவதனால் எமது மனங்களை நோகடிக்கலாம் ஆனால் செயற்பாடுகளை நிறுத்த முடியாது - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

எஸ்.அஷ்ரப்கான்


இனப் பாகுபாடான கருத்துக்களை பதிவிடுவதனால் எமது மனங்களை நோகடிக்கலாம் ஆனால் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

கல்முனையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக சிபாரிசு செய்யப்பட்டதன் நோக்கம் சம்மந்தமாக நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் பின்னரான ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றும் போது, 

முகநூல்களிளும் சில உள்ளுர் இணையத்தளங்களிலும் ஒருசிலர் இனரீதியாக மற்றும் பிரதேச ரீதியாக மாற்றுக் கருத்துக்களை எழுதுவதால் எங்களை மனதளவில் நோக வைக்குமே தவிர எங்களது செயற்பாடுகளுக்கு ஒரு போதும் பாதிப்பு ஏற்படுத்தாது. ஏனெனில் எங்களது செயற்பாடுகள் அனைத்து நேர்மையானதும், நீதியானதும், சுகாதாரம் சார்ந்தவையாகவுமே காணப்படுகின்றது. 

இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கின்ற கொரோனா தொற்று நோயின் அபாயத்தை உணர்ந்தவர்களாக அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்பதோடு முக நூல்களில் முகம் தெரியாமல் எழுதுபவர்களை நான் வினயமாக கேட்டுகொள்ளவது  சகல விடயங்களையும் ஆராய்ந்தறிந்து அதனோடு சம்மந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடிவிட்டு எழுதுங்கள்.அவ்வாறின்றி நீங்கள் எழுதும் எழுத்துக்கள் உங்களை நீங்களே ஒரு இனவாதியாக காட்டிகொள்கின்றீர்கள் என்பதோடு நீங்கள் இந்த சமூகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு தயராகுவதையும் உங்களது விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றது. நீங்கள் மற்றவர்கள் மீது சாட்டும் எல்லா குற்றங்களும் உங்களையே வந்து சேரும். எனவே விடயம் அறிந்து கருத்துக்களை பதிவேற்றம் செய்யுங்கள். 

கல்முனை பிராந்தியத்தில் இன்று வரை 800 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள்.ஏற்கனவே அக்கரைப்பற்று பிரதேசத்தில் தொற்று நிலை அளவுக்கு அதிகமாக அதிகரித்ததை தொடர்ந்து அங்கு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த பிரதேசம் தற்போது தொற்று நிலைமையில் இருந்து நீங்கி வருகின்ற நிலையில் கல்முனை நகர பிரதேசத்தில் 150ற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இது ஒரு உப கொத்தனியை தோற்றுவிக்கும் என்கின்ற ஆதங்கத்தில் குறித்த பிரதேசத்தில் ஒரு பகுதியை அதாவது கல்முனை செய்லான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் கொரோனா ஒழிப்பு செயலணிக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றோம். அதன் முடிவு வரும் வரை குறித்த பிரதேசத்தில் போக்குவரத்துக்களை முடக்கி சன நடமாட்டத்தை குறைக்கின்ற நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றோம். குறித்த மக்களின் ஒத்துழைப்புக்கள் பற்றியும் எதிர்கால நடவடிக்கைகள் சம்மந்தம்மாகவும் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஒரு உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றது.

மேற்படி கூட்டத்தில் குறித்த பிரதேசம் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக சிபாரிசு செய்ததன் காரணம் என்ன? அத்துடன் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்மந்தம்மாகவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தினை தெரிவு செய்ததற்கான முக்கிய நோக்கம் கொரோனா தொற்றினை கல்முனை பிரதேசத்தில் இருந்து ஒழித்துவிடவேண்டும் என்பதற்காக செறிவு கூடிய பகுதிகளை மாத்திரம் தனிமைப்படுத்தி இருந்தோம்.அத்துடன் மார்க்கட் வலயம் என்பது இங்கு மட்டும் அல்ல  இலங்கையில் பேலியகொட,யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று போன்ற பல பகுதியில் மார்க்கட் வலயத்தில் இருந்து தொற்றாளர்கள் கூடுதலாக இணங்காணப்பட்டு இருக்கின்றார்கள்.அதேபோன்று தான் கல்முனை சந்தை தொகுதியும் கொரோனா தொற்று பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றது என்கின்ற உண்மையான நிலைமையினை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

அந்த வகையில் கல்முனை மார்க்கட் வரையிலான பிராந்தியங்கள் தனிமைப்படுத்தலுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும், இக்கூட்டத்தில் எந்த சவால்கள் வந்தாலும் மக்களின் நலனுக்காக நேர்மையான,நீதியான சரியான முடிவினை எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு முடிவினை எடுப்பதாயினும் அனைவருடனும் கலந்துரையாடி முடிவினை எடுப்பதாகவும் வர்த்தக நடவடிக்கைகள் சம்மந்தமான விடயங்களை அடுத்த வாரத்தில் மீண்டும் கூடி ஆராய்வது சம்ந்தமாகவும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள நோயாளிகளின் மருத்துவ விடயங்கள்,உணவு மற்றும் அடிப்படை தேவைகளின் விஸ்தரிப்பு மற்றும் அலுவலகங்களின் நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

எனவே மிக விரைவில் இந்த நோயின் தாக்கத்தினை கல்முனை நகர் பகுதியில் இருந்து ஒழித்து விட முடியும் என நம்புகின்றேன். இதற்கு மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்,அமைப்புகள் சங்கங்கள் என ஒன்றாக ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் இந்த உயர் மட்டக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ்,கல்முனை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார்,கல்முனை முஹையத்தீன் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ்,கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரீப்,பிராந்திய சுகாதார பணிமனையில் திட்டமிடல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம் மாஹிர்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ ரிஸ்னி டாக்டர் பாறூக்,இலாஹி,கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சீத்தீக்,கல்முனை மார்க்கட் வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments: