36 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 660 பேர் பேலியாகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களும்,2 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 828 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்  நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  இதனை உறுதிப்படுத்தியதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அஹலவத்தைப் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நபர் ஒருவர்,  சுகயீனம் காரணமாக கடந்த 11 ஆம் திகதி அஹலவலத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்று மற்றும் அதிக இரத்த அழுத்தமே, அவரின் உயிரிழப்புக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மங்கொன பகுதியைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்ணொருவரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்று , அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் என்பனவே அவரின் மரணத்திற்கு காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்

சிறுநீரக பாதிப்பு மற்றும் கொவிட் நியுமோனியோ என்பனவே, அவரின் உயிரிழப்புக்கு காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மஹரகமைப் பகுதியைச் சேர்ந்த 50 வயதையுடைய ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா நியுமோனியோவே அவரின் மரணத்திற்கு காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா – வத்துப்பிட்டிவலை பகுதியைச் சேர்ந்த 86 வயதுடைய பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் சிறுநீரக பாதிப்பு என்பனவே, அவரின் மரணத்திற்கு காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: