ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 759 பேர் கைது
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த காலப்பகுதியில் 17 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 759 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த 110 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: