13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவிப்பு
(க.கிஷாந்தன்)
இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை உள்ளடக்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த எந்தவொரு இறுதிமுடிவையும் எடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
கண்டி – உடுநுவர பிரதேசத்திலுள்ள பித்தளை உற்பத்தியாளர்களை சந்திப்பதற்காக பித்தளை, பிரம்பு மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 13ஆவது திருத்தம் இரத்து செய்யப்படுவதாக அரச தரப்பினர் பலராலும் வெளியிடப்பட்டு வருகின்ற கருத்துக்கு முரணான கருத்து ஒன்றை முன்வைத்தார்.
தற்போது எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்வோம் என்பதை கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூறிவந்தோம்.
நிச்சயமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கின்றோம். 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து நாங்கள் உத்தியோகபூர்வ எந்தமுடிவும் எடுக்கவில்லை. சிலர் தங்களது சொந்த நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில் 20ஆவது திருத்தச் சட்டம் வரும்போது 13ஆவது திருத்தத்திற்கு நடக்கப்போவதை தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.

No comments: