மாற்றத்திற்கு அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும் -அருண்தம்பிமுத்து


(கனகராசா சரவணன்)
கடந்த அரசுக்கு முட்டுக்கட்டை கொடுத்தவர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் காசையும் செலவழித்தார்கள் ஆனால் அதன் மூலமாக தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு ஒரு நிரந்தர தீர்ர்வை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை என தமிழ் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவில் தழிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்துக்கான காரியாலய திறப்புவிழா நேற்று (8) புதன்கிழமை இடம்பெற்றது இதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்; அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏனைய வலயங்களை போல் சகல வளங்களுடன் இந்த கல்வி வலயம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை வளப்பற்றாக்குறை கட்டடப்பற்றாக்குறை என்று பாரிய சவால்களுக்கு மத்தியில் இந்த பிரதேசத்தின் கல்வி இருக்கின்றது.

இந்த பிரதேசத்தில் வாழும் விவசாயிகள் நீர்பாசன வசதியின்றி, தகுந்த வளங்களின்றி தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள். முக்கியமாக இந்த வருட ஆரம்பத்தில் வவுணதீவு விவசாயிகள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த நேரத்தில் அவர்களது பிரச்சனை நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை வாங்க முன் வரவில்லை என்றும் நெல்லிற்கான சரியான விலை நிர்ணயிக்கப்படவில்லை என

அன்று ஜனாதிபதிவரை சென்று அதற்கான தீர்வை எம்மால் பெற முடிந்தது அதை தொடர்ந்து வவுணதீவை சேர்ந்த விவசாயிகள் கொரோனா காலகட்டத்தில் சுமூகமாக சென்று தமது விவசாய நடவடிக்கையில் ஈடுபட ஏற்பட்ட தடங்கல் தொடர்பான விடயங்களை என்னுடன் பேசினார்கள். உண்மை என்னவென்றால் இந்த பிரதேச விவசாயிகளுக்கு என்னால் கொண்டுவரகூடிய விடயங்கள் வெறும் தொடர்பு மூலமாக தான் ஏற்பட்டது.

ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும். தொடர்பு மூலமாக சில வசதிகளை ஏற்படுத்தலாம் ஆனால் அதிகாரம் மூலமாக தான் நிரந்தர தீர்வை ஏற்படுத்தலாம். அனைவருக்கும் தெரியும்

மட்டக்களப்பு மக்களுக்கு குடிநீர் வேண்டுமென்றால் உன்னிச்சை குளத்தினூடாக தான் செல்கிறது. இந்த குடிநீர் திட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு எந்த நன்மை கொடுத்திருக்கிறது என்ற கேள்வியை வழங்க வேண்டும். இந்த பிரதேச மக்கள் மட்டக்களப்பு மக்களுக்கு குடிநீர் வழங்கியிருக்கிறார்கள் உணவு வழங்கியிருக்கிறார்கள் ஆனால் தமக்கு தேவையான உணவை குடிநீரை பெற பல்வேறு தடங்கள் ஏற்படுகிறது.

எமக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தால் உடனடியாக சரியான நீர்பாசன திட்டத்தை கொண்டுவருவது மட்டுமல்ல குடிநீருக்கான நிரந்தர தீர்வையும் கொண்டுவருவோம். முக்கியமாக மன்முனை வடக்கு பிரதேசத்திற்கு வெளியே உள்ள அனைத்து ஏழுவாங்கரை பிரதேசத்திற்கும் வேறு முறையில் குடிநீர் வழங்கும் திட்டத்தை நிச்சயமாக முன்வைப்பேன்.

கோரளைபற்று தெற்கு, பட்டிப்பளை, வெல்லாவெளி பிரதேசங்களில் மாற்றுவழிகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைப்போம். கரடியனாறு குளத்தை அமைப்பதன் மூலமாக 12000 ஏக்கர் நிலத்தை நீர்பாசனத்திற்குள் கொண்டுவருவோம் அதே போல் பல்லாயிரகனக்கான விவசாயிகள் தகுந்த அனுமதி பத்திரம் இன்றி விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் அதற்கான வழியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்

விவசாயிகளுக்கு கிராமங்களில் வாழும் மக்களுக்கு யானைகளால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது .எங்களுக்கு ஆணை கிடைக்கும் தருணத்தில் ஒரு வருடத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பேன். யானை வேலி தகுந்ந முறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் அமைக்கப்படவில்லை

அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கான கடன் வழிகளை ஏற்படுத்தும் திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். ஏன்றார்.

No comments: