மட்டக்களப்பில் அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் தபால் திணைக்களத்திற்கு இன்று ஒப்படைப்பு


பொதுத் தேர்தல் 2020 இற்கான தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் பொதி செய்யப்பட்டு அஞ்சல் வாக்களிக்கும் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்திற்கு இன்று ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த அரச அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் 13156 விண்ணப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12815 விண்ணப்பங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை காப்புறுதி செய்யப்பட்ட தபால்பொதி மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.

இவ்வாக்குச் சீட்டுக்களை பொதி செய்யும் நடவடிக்கை உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் மேற்பார்வையில் 23 நிலையங்களில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கிரமமாக இடம்பெற்றது. இதேவேளை தபால் வாக்குச் சீட்டுக்களை பொதி செய்யும் நடவடிக்கைக்காக மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த 19 நிலையங்களுடன் தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்படடிருந்த 4 நிலையங்களிலுமாக 211 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


பொதி செய்யப்பட்ட வாக்குச் சீட்டுக்களை காப்புறுதி செய்யப்பட்ட தபால் பொதி மூலம் அஞ்சல் வாக்காளர்கள் வாக்களிக்கும் 428 நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக பிரதி தபால்மா அதிபர் எஸ். ஜெகன் மேட்பார்வையில் மட்டக்களப்பு பிரமத தபாலக, தபால் அதிபர் ஏ. சுகுமார் தலைமையிலான தபால் பணிக்குளுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


பொதுத் தேர்தல் 2020 இற்கான தபால் வாக்களிப்பு நடைபெறும் தினங்களாக எதிர்வரும் ஜூலை மாதம் 14, 15 ஆந் திகதிகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரவணன்

No comments: