உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஓராண்டு கழிந்தும் இன்னும் நீதியில்லை.


(செல்வி விநாயகமூர்த்தி)

இலங்கை தீவிலே யேசுபிரான் உயிர்த்த நாளில் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துள்ளது.

நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் ஓராண்டு கழிந்த இந்நாளில் இலங்கை வாழ் மக்கள் நினைவு கூறுகின்றனர்.

இலங்கையை பொறுத்தவரை யுத்தமும் குண்டுத்தாக்குதலும் புதிதல்லவே.ஆனால் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகளின் பின் இவ் மிலேச்சதனமான தாக்குதலானது இடம்பெற்றுள்ளமை அனைவர் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 


2019 ஏப்ரல் 21 ல் இலங்கையை உலுக்கிய இவ் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலால் இலங்கை மக்கள் மட்டுமல்லாது உலகலாவிய ரீதியில் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த கோரத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ரணங்கள் ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் இன்றும் ஆறாத வடுவாகவே ஆழ்மனங்களில் பதிந்துள்ளன.

பிஞ்சுகளின் கருகிய உடல்களும் எரிகாயங்களோடு உயிருக்கு போராடிய உறவுகளும் பிள்ளைகளை காணாது தேடிய பெற்றோர்கள் என இன்றைய நாளில் நடந்தேறிய அக்கொடூர சம்பவங்கள் கண் முன்னே வந்து போகின்றன.இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவுகளும் ,இத் தாக்குதலில் அங்கவீனமானவர்களும் வலியுடன் கூடிய வடுக்களையே இன்னும் சுமந்து வாழ்ந்து வருகின்றனர்.


யேசுபிரான் உயிர்த்த நாளில் புத்தாடைகள் அணிந்து காலைவேளையில் ஆராதனைகளில் ஈடுபடுவதற்காக தேவாலயங்களுக்கு சென்றவர்களும் இலங்கைக்கு சுற்றுளா பயணிகளாக வருகைதந்து விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் உணவருந்த கூடிநின்ற வேளையில் அவர்களின் கனவு அனைத்தும் அந்த காலை நேரத்தில் நொடிப்பொழுதில் கண்முன்னே சிதறிப் போயின.

நீர்கொழும்பு, புனித செபஸ்தியன் தேவாலயம், கொழும்பு, புனித அந்தோனியார் தேவாலயம்,மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்,
கொழும்பு கிங்ஸ்பெர்ரி, சினமன் கிரான்ட் மற்றும் சங்ரி-லா ஆகிய ஐந்து நட்சத்திர விடுதிகளும் மனித வெடி குண்டு தாக்குதலுக்கு இலக்காகின.அத்தோடு பிற்பகல் வேளையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகாமையிலும் தெமட்டக்கொடை வீடொன்றிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.


இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள், வயோதிபர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட 270 பேர் கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டோர் இத்தாக்குதலில் படு காயமடைந்தனர்.

இப் பாரிய தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள அதேவேளை, அவயங்களை இழந்தவர்கள் இன்றும் கதியற்ற நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்கிருஸ்தவர்களை இலக்கு வைத்தே இவ் தற்கொலைகுண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.ஆனாலும் சம்பவம் இடம்பெற்று ஒருவருடமாகின்ற போதும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு இன்னும் நீதியான தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை.


சட்டமும் நீதியும் அப்பாவி மக்கள் மீதுதான் என்பதை இந்த ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் உணர்த்தி நிற்கிறது.

அரசியல் சூழ்ச்சியாலும் மத வெறியின் உச்சக்கட்டத்தினாலும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்த ஷக்ரான் குழுவினரும் இத்தாக்குதலோடு இக்குழுவை வளர்த்து விட்டது மட்டுமின்றி இன்னும் நல்லவர்களாக நடித்து சுதந்திரமாக வெளியில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் அனைவரும் இனமத வேறுபாடு பார்க்கப்படாது கைது செய்யப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே அரசாங்கம் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு செய்யும் கைங்கரியமாகும்.

No comments: