கொரோனா நிவாரணமும்,தடுக்கிவிழும் சாராயத்தவறணைகளும் !
தான் ஆறாம் அறிவான பகுத்தறிவைக்கொண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் உற்பத்தியோடு செவ்வாயில் குடியேறி வாழும் விஞ்ஞான ஆராய்ச்சி யுகத்தில் நடைபோடுகின்றான்.
மூன்றாம் உலக யுத்தத்தை சத்தமில்லாது வைரஸ் வடிவில் உலகம் முழுதும் முடிக்கிவிட்டு தன் பகுத்தறிவால் மெஞ்ஞானத்தைக்கூட மிஞ்சியவானாக இன்று வேடிக்கை பார்க்கின்றான்.
இன்று உலகம் முழுதும் பரவியிருக்கும் உயிர்கொல்லி தொற்று நோயான கொரோனாவினால் உலகளவில் சுமார் 170000 உயிர் இழப்புக்களை தாண்டிய நிலையில் ஒவ்வோர் நாடுகளும் கொரானாவினால் பாதிக்கப்பட்டு அந்தந்த நாடுகள் தங்களின் மக்களை காப்பாற்றவும் நலிந்துபோன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் போராடிவரும் நிலையில்.
இலங்கையும் பல்வேறு வழிமுறைகளை கொரோனா தடுப்பில் முன்னெடுத்து வருகின்றது.கடந்த மாதம் எமது நாட்டில் 07 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வேளை மார்ச் மாதம் 13ம்திகதி முதல் இலங்கையில் அரசமற்றும் தனியார் தாபனங்கள்,பல்கலைகழகங்கள்,வங்கிகள் ,வியாபாரத்தளங்கள் அனைத்துக்கும் விடுமுறையளித்து இலங்கை முழுதும் அரசு ஊரடங்கை பிரகடனப்டுத்தியதை யாவரும் அறிந்ததே.
இந்த காலப்பகுதியில் தமது வாழ்வாதாரத்தை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் தவித்த மக்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்,பொது அமைப்புக்களும் உலருணவு பொதிகளை இடர்கால நிவாரண உதவியாக வழங்கி வைத்தது.
ஆனால் அரசானது இவற்றுக்கு ஒரு படி மேலாக சென்று சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்காக 10000 ரூபா வட்டியில்லா கடனுதவியும்,நாளாந்த தொழிலையிழந்த குடும்பங்களுக்கு 5000 நிதி உதவியும் வழங்கியமை வரவேற்க்கதக்க விடயமாகும்.
ஆனால் கொரோனா தொற்றால் இலங்கை முற்றாக முடங்கியிருந்த வேளையில்.மது பாவனைபுகை பிடித்தல் போதைவஸ்து பாவனை,வாகனவிபத்துக்கள் என்பன முற்றாக ஒழிக்கப்பட்ட அல்லது குறைந்திருந்தமையும் ஒரு போதையற்ற இலங்கையாக பிரகாசித்தமையும் யாவராலும் வரவேற்க்கப்பட்டது.
இன்று கொரோனோ அச்சம் முற்றாக விலக்கப்படாத நிலையிலும் நாட்டில் வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதார நிலையை கட்டெயெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நேற்று 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பகுதிபகுதியாக அரச அறிவுறுத்தலுக்கமைய திறக்கப்பட்டமை ஓரளவு திருப்தியையும் அச்சம் தவிர்ந்த ஒரு உணரவையும் தந்திருந்தாலும் நேற்று நாடுமுழுதும் சாராயத்தவறணைகள் திறக்கப்பட்டதும் பெருமளவான குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுப்போத்தல்களை வாங்கி சென்றதையும் அவதானிக்க முடிந்தமை பெரும் வேதனையளிக்கிறது.
கொரோனா அச்சம் முற்றுமுழுதாக நாட்டிலிருந்து மீளாத நிலையிலும்,ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் இன்றைய தினம் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இதைத்தவிர வடகிழக்கில் கொரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன்.
தொடரும் தற்கொலைகளும்,தொடர் ஊரங்கால் வீட்டுக்குள் முடங்கப்பட்டு தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாது பாரிய சிரமத்தையும் பொருளாதார சிக்கல்களையும் விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இடர்கால கொடுப்பனவாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண நிதிகளை தம் குடும்பத்திற்கான பட்டினி ,வறுமை,தமது குடும்பத்துக்கான சிறு சேமிப்பு இவற்றையெல்லாம் தாண்டி குடி பிரியர்கள் தவறணைகளில் கொண்டு தொலைத்து முட்டி மோதி மது பாட்டில்களை அள்ளும் காட்சிகளை காணும்போது எம் இளைய சமுதாயம் எங்கு செல்கிறது.?
என எண்ணத்தோன்றுவதோடு எம் சமுதாயத்தின் நிலை கண்டு வெட்கி தலை குனிந்து கடந்து செல்லத்தான் தோன்றுகிறது.






No comments: