முல்லைத்தீவு ‘கரும்புள்ளியான் நீர் வழங்கல் திட்டம்’ மக்கள் பாவனைக்காகத் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பதித்து நிர்மாணிக்கப்பட்ட ‘கரும்புள்ளியான் நீர் வழங்கல் திட்டம்’ மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026.11.24 ஆம் திகதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் சுமார் 2,600 மில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 இதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 23,600 மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வசதி கிடைக்கப்பெறுவதுடன், சுமார் 7,000 வீடுகளுக்குப் புதிய குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவுள்ளன.

நாளொன்றுக்கு 40 இலட்சம் லீற்றர் நீரைச் சுத்திகரிக்கும் கொள்ளளவைக் கொண்ட இத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மேற்பரப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுத்தமான குடிநீர் என்பது ஒரு சலுகையல்ல, அது ஒரு அடிப்படை மனித உரிமையாகும் எனவும், வடக்கிலும் தெற்கிலும் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் அவ்வுரிமையைச் சமமாக உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

ஊடகப் பிரிவு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு.



No comments: