100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை
மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
காலை வேளையில் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய கடல் பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
காற்று வடகிழக்கு திசையிலிருந்து அல்லது திசை மாறி வீசக்கூடும் காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை இருக்கும்.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பகுதிகளிலும், திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடல் பகுதிகளிலும், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
குறிப்பிட்ட சில கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்; நாட்டின் ஏனைய கடல் பகுதிகள் மிதமான நிலையில் இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.

No comments: