கொழும்பில் திரையிடப்பட்ட லூஸி திரைப்படம் ஒரு பார்வை

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் பூர்விகாவின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லூஸி”. ஈழத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம்  அண்மையில் கொழும்பு சவோய் பிரிமியர் திரையரங்கில் வெளியிடப்பட்டது.

இதில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி பிரியா, சுகிர்தன், ஜொனி ஆன்ரன், கௌசி ராஜ், ஆர்.ஜே.நெலு, ஷாஷா ஷெரீன் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்திருந்தனர்.

இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா மேற்கொண்டதுடன், பத்மயன் சிவா இசையமைத்துள்ளார் அத்துடன் கொழும்புத் திரையிடலானது இராவணா என்டர்டெயின்மென்ட் நிறுவன அதிபர் கார்மேகம் சுரேஷ்குமார் அவர்களினால் வெளியிடப்பட்டது முக்கிய அம்சமாகும்.

ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பின் அவள் தன்னை எப்படிப்பிரதிபலிக்கப் போகிறாள் என்பதில்தான் அவளது வாழ்க்கையின் சூட்சுமம் அடங்கிவிடகிறது. அந்த சூட்சுமத்தை எப்படிக் கைக்கொள்கிறாள் இந்தப்பெண் என்பதே லூசியின் ஒட்டுமொத்தப்  பார்வையாக படம் வலம் வருகிறது.

 வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உக்கிர முகத்தை அழுத்தமாக உணர்த்திய நடிகை பூர்விகா, படம் முழுவதும் லூஸியாகவே வாழ்ந்திருந்தமை இரசிகர்களிடம் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றது.

மிரட்டலாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை  இத்திரைப்படத்தை பற்றிய விமர்சனங்களை இப்படத்தை பார்வையிட வந்திருந்த இரசிகர்கள் மிகவும் உற்சாகமாக வழங்கியிருந்தனர்.  

மேலும் இந்நிகழ்வில் கொழும்பின் மிக முக்கியஸ்தர்களான திரைப்பட கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.












No comments: