மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கைது

மாணவர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றின் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஐந்து மாணவர்கள் இரகசியமாக உள்நுழைந்திருந்த நிலையில் விடுதி வார்டனிடம் கையும் களவுமாக சிக்கியிருந்தனர்.


மாணவியர் விடுதியில் தங்கியிருந்த ஐந்து மாணவிகளின் விருப்பத்துடனேயே அவர்கள் அவ்வாறு திருட்டுத்தனமாக மாணவியர் விடுதிக்குள் நுழைந்திருந்தமை விசாரணைகளில் தெரிய வந்திருந்தது. அவர்கள் அனைவரும் 15 -17 வயதுப்பருவ மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காவலாளிகள் சேர்ந்து குறித்த மாணவர்கள் ஐந்து பேரையும் தாக்கி அவர்களின் தலைமுடியையும் வெட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காவலாளிகள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை இம்மாதம் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
No comments: