புதிய தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்கு இளைஞர்கள் குழு

 


தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இளைஞர் குழுவொன்றுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த இளைஞர்கள் குழு நாட்டின் பிரதான நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததுடன், அது தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அந்த கட்டுரையை எழுதி வெளியிட்ட இளம் ஊடகவியலாளர்களான அனுஷ்கா ஜெயசூரிய மற்றும் செனோன் சல்காது ஆகியோருடன் தன்னை சந்திக்க வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த இளைஞர் குழுவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். 

இந்த சந்திப்பு, இளைஞர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதற்கும் அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதிக்கு வாய்ப்பாக அமைந்தது. இதன்போது, இளைஞர் குழுவினர் தமது பிரச்சினைகளையும் யோசனைகளையும் முன்வைத்தனர். அவர்களின் கேள்விகள் மற்றும் கருத்துக்களை ஜனாதிபதி செவிமடுத்ததுடன் அவர்களுடைய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பாடசாலை மட்டத்தில் முறையான மனநலக் கல்வி அவசியமானது எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான கல்வி முறையின் அவசியத்தையும் இளைஞர் குழு வலியுறுத்தியதோடு கல்வித் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து இங்கு பிரதானமாக ஆராயப்பட்டது.

பாடசாலைகளில் மனநலம் தொடர்பில் வழங்கப்படும் கவனம் போதுமானதாக இல்லை எனவும் மனநல குறைபாடு உள்ளவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் தொடர்பில் அதிகமாக விடயங்கள் செய்ய வேண்டியிருப்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இத்துறைக்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆளணிகள் இல்லாததே நாடு எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அதனை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பல நாடுகளில் வரி என்பது புதிய கருத்தல்ல. ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை என வரி விவகாரத்தை முன்வைத்து இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தினால் ஆராய முடியும் எனவும் அதற்காக பல குழுக்களை நியமித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குக் குழு மற்றும் பொது நிதிக் குழு உள்ளிட்ட மேலும் பல குழுக்கள் உள்ளன. அவற்றின் செயற்பாடுகளை மேலும் பலப்படுத்த பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் கொண்டு வரப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

புதிய வரிகள் காரணமாக வெளிப்படைத்தன்மை பாரிய பிரச்சினையாக காணப்படுவதாகவும், திடீரென தமது சம்பளத்தில் பெரும் பகுதியை செலுத்த வேண்டியிருப்பதனால் மக்கள் அதனை கடுமையாக உணர்ந்துள்ளதாகவும் இளைஞர் குழு , ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“பெரிய வரவு செலவுத் திட்டத்தில் அனைத்தும் முறையாக ஒதுக்கப்படுவதால் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எந்தவொரு வரவு செலவுத் திட்டத்திலும், பணம் முறையாக செலவிடப்படுவதை பாராளுமன்றம் தான் உறுதி செய்கிறது. எனவே, பாராளுமன்றம் தனது அதிகாரங்களை இப்போதே பயன்படுத்த வேண்டும். கடந்த முறையும் மேற்பார்வைக் குழுக்களின் தலைவர் பதவிக்கான வெற்றிடங்களை எதிர்க்கட்சிகள் நிரப்பவில்லை. இம்முறை அவர்கள் தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளுக்காக பாராளுமன்றத்திற்கு வரவில்லை. ஆனால் அதற்கு எதிர்க்கட்சியில் இருந்து சில பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதுதான் வெளிப்படைத்தன்மை. செலவுகள் மற்றும் ஏனைய விடயங்களைப் பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை அசாதாரணமான பொருளாதார நிலையில் இருக்கிறது என்றும் அதிலிருந்து மீள கடனை மறுசீரமைக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது போன்ற வேறு துறைகளில் இருந்து அரசாங்கம் சில செலவினங்களைக் குறைக்கவும் பணத்தைத் தேடவும் நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது இலகுவான காரியமல்ல என்றும், ஆனால் யாரேனும் இதைச் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

“இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் கடினமான நிலையில் உள்ளது. அதிலிருந்து மீள வேண்டும். இதற்காக கடனை மறுசீரமைக்க வேண்டும். கடனை மறுசீரமைக்க, நாம் செலவுகளைக் குறைக்கவோ அல்லது அதற்கான பணத்தைத் தேடவோ வேண்டும். சில துறைகளில் அவ்வாறு செய்தோம். ஆனால் சில துறைகளுக்கு நாம் பணம் தேட வேண்டும். அதனால்தான் அண்மையில் மின் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது. இப்படிச் செய்தாலும் மின்சார சபை நட்டத்தை எதிர்கொள்கிறது. இதற்கு வேறு வழியில்லை. இல்லாவிட்டால் மின்சாரம் இல்லாமல் வாழ நேரிடும். இந்த சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமானால், சில விடயங்களை விருப்பமின்றி கூட செய்ய வேண்டியிருக்கும்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இளைஞர் குழு தனிப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினையையை எழுப்பியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓரளவு கல்வி அறிவு இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இதற்கு ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்தார். ஆனால் இது நடைமுறைக்குவர சிறிது காலம் எடுக்கும் என்று குறிப்பிட்டார். அநேகமான இளைஞர்களுக்கு பட்டம் அல்லது வர்த்தக அனுபவம் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது வாக்காளர்களின் பணி என்பதை நினைவுகூர்ந்தார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“தனிப்பட்ட பொறுப்புக்கூறலில் உங்களுக்கு வாக்குகளை வழங்குவதற்கான ஒரு வழி இருக்கிறது. அவர்களில் யாரும் தேவையில்லை என்றால், கட்சிக்கு வாக்களித்து தனக்கு விருப்பமான நபரைத் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும், இந்த செயல்முறைக்கு நிறைய பணம் செலவாகும். எனவே, அதிக செலவு செய்யாமல் சிறந்த தேர்தல் முறையை எப்படி உருவாக்குவது என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான பணம், தனிப்பட்ட வேட்பாளர்களால்தான் செலவிடப்படுகிறது, கட்சிகளால் அல்ல” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற அவைக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடப்பதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவ்வாறான செயற்பாடுகள் உகந்ததல்ல எனவும், ஏனைய நாடுகளில் இவ்வாறான செயற்பாடுகளை தாம் கண்டுள்ளதாகவும், இது இலங்கைக்கு மாத்திரம் உரித்தானதல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆனால் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வாறான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.



No comments: