வேட்பு மனுக்கள் வாக்களிப்பு இடம்பெறும் வரையில் செல்லுபடியாகும் ?


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் வாக்களிப்பு இடம்பெறும் வரையில் செல்லுபடியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 பரவல் காலத்தில், பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு கோரப்பட்டிருந்த போதிலும், வாக்களிப்பு பிற்போடப்பட்டமையால் கோரப்பட்ட வேட்பு மனுக்களுக்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேநேரம், நிதி இல்லாத காரணத்தினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உறுதியளித்தவாறு நடத்த முடியாமல்போகும் நிலை ஏற்படும் என நாளை அல்லது நாளை மறுதினம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரியவாறு நடத்த நடவடிக்கை எடுப்பதாக, தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி உறுதிப்பாட்டை வழங்கியிருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், அந்த உறுதிமொழிக்கு அமைய நடவடிக்கை எடுப்பதற்கு இதுவரையில் நிதி கிடைக்கப்பெறவில்லை என மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றம் தேர்தலுக்காக 10 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுவிட்டதாக அரச அச்சகத் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.




No comments: