இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் இன்று
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் காலி முகத்திடலில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதேநேரம், இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளில் மூவாயிரத்து 284 இராணுவத்தினர், 179 யுத்த வாகனங்கள், 867 கடற்படையினர் மற்றும் அவர்களது 52 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
வான் படையின் 695 உத்தியோகத்தர்களும், 336 காவல்துறையினர் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
அத்துடன் காவல்துறை விசேட அதிரடி படையை சேர்ந்த 220 பேரும் இன்றைய சுதந்திர நிகழ்வில் இணையவுள்ளனர்.
இதேவேளை, 75ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சுதந்திரம் பெறுவதற்கான பயணம் இரத்தமும்,கண்ணீரும், வியர்வையுமான பயணமாகும் என்பதுடன்,இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களை இந்தத் தருணத்தில் மிகவும் பெருமையுடனும் மரியாதையுடனும் நினைவுகூர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒரு காலனித்துவத்தில் இருந்து விடுபடுவது மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் சாதிக்க வேண்டிய பல விடயங்களும் உள்ளன.
அதற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற உன்னத எதிர்பார்ப்புகளுடன் முழு நாட்டிற்கும் உறுதியான, பெருமைமிக்க சுதந்திர தினமாக அமைய வாழ்த்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தவாறு அமெரிக்க ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments: